Subscribe Alerts Via Feedburner

Saturday, October 27, 2018

மதிமாறன் சுட்ட தோசை

இதை எழுதத் துவங்கும் முன் "என்னடா இது... பேச வேண்டிய, 'ஆத்தூர் 13 வயது தலித் சிறுமி தலையை அறுத்து ஆதிக்க சாதிக் காரர்கள் கொன்று போட்ட அவலத்'தைப் பற்றிப் பேசாமல், trending-ஆகப் பேசப் படுக்க கொண்டிருக்கும் தோசை matter-ஐப் பற்றி நாமும் பேச முற்படுகிறோமே" என்ற குற்ற உணர்வு எழுந்தது.




இருப்பினும், தோசை பற்றிய பேச்சை வைத்து ஆற்றப்பட்டுக் கொண்டிருக்கும் எதிர்வினைகளையும் எள்ளல்களையும் பார்க்கையில், நானும் அதை பற்றிப் பேசுவது தேவை என எனக்குப் படுகிறது.


தோழர் மதிமாறன் அவர்கள் "தோசையில் சாதி இருக்கிறது" எனத் தொடங்கி அது எவ்வாறு என விளக்கிய 2 நிமிட காணொளியைப் பார்த்தவுடன் எனக்கும் அபத்தமாகத் (தமிழ்ச் சொல் தேட முற்பட்டு எண்ண ஓட்டத்தை தடுக்க விரும்பவில்லை) தான் பட்டது. 'பரந்து விரிந்த நிலப்பரப்புகளில், பொருளாதார வசதிக்கு ஏற்ப உணவுப் பழக்கம் மாறுவது இயற்கை தானே' எனத் தான் தோன்றிற்று (நண்பன் Manoj Prabhakar கூறிய "மாடி வீட்டு தலித் நண்பன்" எல்லாம் இந்த நூற்றாண்டு மாற்றமே. அதற்கு முன் எந்த தலித் குடும்பம் மாடி வீடு கட்டி வாழ்ந்தது?). அதையும் மீறி எனக்கு உடன் பிறப்புகள் மீது ஏற்பட்ட வருத்தம், "தலைவன் தவறு செய்கையில் எதிர்க்காவிடினும், முட்டுக் கொடுக்காமல் இருக்கலாமே" என்று. நல்லவேளை, அந்த இரண்டு நிமிட காணொளித் துணுக்கைப் பார்த்த பார்த்த மாத்திரத்தில், என் கருத்தைப் பொது வெளியில் அவசரப்பட்டு கூறிவிடவில்லை நான்.


முழுக் காணொளியைப் பார்த்தேன். அதற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு எழுந்தது என்று பார்த்த மாத்திரத்தில் புரிந்தது. ஒன்று 'தோசை' துணுக்கு - சீமானியத் தம்பிகளை "மாட்டிக்கிட்டாண்டா" என பரவசப் படுத்தியது. மற்றொன்று 'காப்பி' துணுக்கு - பார்ப்பனர்களின் ego-வைத் தொட்டது. சீமானியத் தம்பிகளைப் பற்றி நான் பேசப் போவது இல்லை.

முதலில், 'சாதி இல்லை சாதி இல்லை' எனப் பேசுபவர்கள், 'பார்ப்பனர்களை' பெரும்பாலான நேரங்களில் சாதி பெயரை வைத்து இகழ என்ன தேவை?" என்ற கேள்விக்கு நான் பல காலம் விடை தேடிக் காத்திருந்தேன். ஆழ்ந்து நோக்குகையில், "எத்தனை பார்ப்பனர்கள் தங்களை பிராமணர்கள் எனச் சொல்லிக் கொள்ள வெட்கப் பட்டிருக்கிறார்கள்?" என்ற பதில் கேள்வி என்னுள் எழுந்தது. "எத்தனை பார்ப்பனப் பெண்கள் பொது இடத்திலோ பொது வெளியிலோ சமூக வலைத்தளங்களிலோ 'Just TamBrahm things' என சாதிப் பெருமை பேசுவதை இழிவாகக் கருதுகிறார்கள்?" எனவும் "எத்தனை பார்ப்பன ஆண்கள் பொது வெளியில் பூணூல் தெரியப் பயணிப்பதை இழிவாகக் கருதுகிறார்கள்?" எனவும் சிந்தித்தால், முதல் கேள்விக்கான விடை புலப்பட்டு விடும்.

மதிமாறனின் முழுப் பேச்சைக் கொண்ட காணொளியில், "தோளில் துண்டு போடுவது அநாகரீகம் அல்ல. தோளில் பூணூல் போடுவதே அநாகரீகம்" எனக் கூறியிருப்பதை எத்தனை பார்ப்பனர்கள் உணரப் போகிறார்கள்? மேலும் 'காப்பி' துணுக்கு... எனதருமைப் பார்ப்பனர்களே... "நம்ம ஆத்து காப்பி" எனக் கடைக்கு பெயர் வைத்திருக்கிறீர்களே... எங்காவது ஒரு இடத்தில் "நம்ம ஆத்து டீ" எனப் பெயர் வைத்திருக்கிறீர்களா? இந்த கேள்விக்கு நீங்கள் விடை அளித்துவிட்டால், மதிமாறன் பேசியது அபத்தமானது என்பதை நான் உங்களுடன் சேர்ந்து ஒப்புக் கொள்கிறேன்.

அவர் பேச்சின் இரண்டாவது aspect-ஆக நான் பார்ப்பது, செட்டியார்கள் நிறைந்திருக்கும் ஊருக்கே சென்று, அவர்கள் மீது வைத்திருக்கும் நன்றியுணர்வைச் சற்று காட்டிவிட்டு, அவர்கள் வரலாற்றில் செய்த சாதிய ஒடுக்குமுறைகளையும் சாடுகிறார். இது பெரியார் பாணி. ஒரு ஆதிக்க சாதியிடம் இப்படிச் சென்று பேசி புரிய வைக்க முற்பட்டு, ஆதிக்க சாதிக்கும் ஒடுக்கப்பட்ட சாதிக்கும் இடையில் இருந்த இடைவெளியை இயன்றவரையில் குறைத்தவர் பெரியார். இது போல் thaambras-க்குச் சென்று பேசினால் என்ன குரூரமான எதிர்வினைகள் ஆற்றப்படும் என்பதற்கு ஹெச். ராஜாவின் வாழ்க்கை வரலாறே சிறந்த சான்று. பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனர் அல்லாதாருக்கும் உள்ள இந்த இடைவெளியை வலுவாய்க் குறைக்க பார்ப்பனர்கள் இதுவரை விரும்பியதே இல்லை என்பதால் தான் நம் நாட்டு அரசியல் 'பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார்' எனப் பிரிந்திருக்கிறது.

கடைசியாய் ஒன்று. என் வீட்டில் என் தாயின் சமையலை "என்னம்மா நீ? திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகியும் நீ சரியா சமைக்க மாட்டேங்கிற?" என்று பல நூறு முறைகள் எள்ளி நகையாடியிருக்கிறேன். சில மாதங்களுக்கு முன் பணி ஒய்வு பெற்ற என் தாய் சமைப்பவைகளை உண்டு "பரவாயில்லையே... 25 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பிறகாவது நன்றாகச் சமைக்கக் கற்றுக் கொண்டு விட்டாயே" என்று பாராட்டுவதாக நினைத்துக் கொண்டு கூறியதெல்லாம் இன்று தோழர் மதிமாறன் காணொளியைப் பார்த்த பிறகு, என் தாயின் மீது நான் நிகழ்த்திய 'குரூரங்களின்' உச்சம் என உணர முடிகிறது. 'குடும்பம், முன்னேற்றம், உழைப்பு' என எவ்வளவு இடைவெளியின்றி சிந்தித்துக் கொண்டிருந்தால், என் தாய்க்கு சமையலில் நாட்டம் இல்லாமல் போயிருக்கும் என எனக்கு உணர்த்தியிருக்கிறார் தோழர் மதிமாறன். இப்படிப்பட்ட 'பெண்ணடிமைத் தனத்தைப் போக்க வல்ல' பகுத்தறிவை எனக்கு என் தாய் கூட உணர்த்தியதில்லை... ஆனால், என் தாய் எந்த அமைப்பை நான் பின்பற்றுவதை ஏற்பதில்லையோ, அந்த அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உணர்த்தியிருக்கிறார். இதுவன்றி வேறென்ன 'பெரியாரியம்'?

மரியாதை மிக்க வணக்கங்கள், தோழர் மதிமாறன் 

No comments:

Post a Comment