உன்னை எனக்கு
எவ்வளவு தெரியுமென்று
நம்புகிறேனோ
அவ்வளவு தெரியாமலும்
இருக்கிறது.
முதல்முறையாக
இன்று உனக்கு
ஓர் ஆடை வாங்கச் சென்றபோது
உன் அளவு எனக்குத் தெரியாமல் போய்விட்டது.
எதிர்பாராத ஒரு பரிசுக்கான அளவை
உன்னிடமே எப்படிக் கேட்பது என்றும்
எனக்குத் தெரியவில்லை.
இருளில் தழுவிக்கொண்டபோது
உன் தோள்கள் எப்படி விரிந்திருந்தன என்றோ
உன் மார்புகள் எப்படிப் பரந்திருந்தன என்றோ
நான் அறிபவை எல்லாமே
உத்தேசமான அளவுகளாக இருந்தன.
எனது ஒவ்வொரு மனநிலையிலும்
அவை வேறு வேறு அளவுகளாக
குறுகலாகவோ பரந்ததாகவோ
இருக்கின்றன.
உன்னைப்போலவே இருந்த
மாடல் பொம்மையின் முன்
நின்றபடி
அதன் கைகளைத் தொட்டுப் பார்த்தேன்.
"அந்த பொம்மையின் உயரம் இருப்பாரா?"
என்றான் விற்பனையாளன்.
அந்தக் கேள்வி என்னை
நாணமுறச் செய்தது என்றாலும்
நான் அந்த பொம்மையை
இன்னும் நெருங்கி நின்றேன்.
நான் உனக்கு முன்னால் நிற்கும்போது
என் நெற்றி
உன் முகவாய்க்கு அருகில் இருக்கும்.
அப்போது மிகவும் குள்ளமாக உணர்வேன்.
இப்போது அந்த பொம்மைக்கு அருகிலும்
அதேபோல் உணர்ந்தேன்.
ஆனாலும் உன் உடலின் பருமனை
எப்படி உறுதி செய்து கொள்வது?
அந்த பொம்மையை
இறுக்கக் கட்டிப்பிடித்துப்பார்த்து
அறிய விரும்பினேன்.
அப்போது எனது ஒரு கை
எனது மறுகையை
உன் முதுகின் பின்புறம்
எப்படித் தொடுகிறது
என்பதை வைத்து நான் உன் அளவை
சரியாகத் தெரிந்து கொள்வேன்.
அத்தனை பேர் நடுவே
அத்தனை வெளிச்சத்தில்
ஒரு மனிதனைக்கூட
அணைத்துக்கொண்டுவிடலாம்
ஒரு மாடல் பொம்மையை
அணைத்துக்கொள்வது எப்படி என்று
தெரியவில்லை.
07.06.2017 எனத் தேதியிடப்பட்ட விகடன் வார இதழில் வெளியானது.
இந்த கவிதையை வாசித்த அனுபவம் பற்றியான என் வலையொலியை (Podcast) கேட்க கீழுள்ள Play பித்தானை அழுத்தவும்:
No comments:
Post a Comment