Subscribe Alerts Via Feedburner

Tuesday, March 8, 2016

நட்பே காதலாய் மருவக் கண்டோம்!

பெரும்பாலான ஆண்களுக்கு
பால்ய சிநேகிதி
என்றொருத்தி இருப்பதில்லை.
ஆனால், எனக்கப்படியில்லை!



நினைவு தெரிந்த பிராயத்திலிருந்தே
அவளுடனான என் நட்பு மலர்ந்தது!
ஏன்? அதற்கு முன்பாகக் கூட
எங்கள் நட்பு அரும்பியிருக்கலாம்...

பிறந்தது முதலே அவளை நான்
கொஞ்சி விளையாடியிருக்கிறேனாம் -
அம்மா அடிக்கடி கூறுவாள்!

இன்னும் சொல்லப்போனால்,
நாங்களிருவரும் ஒரே நாளில் தான்
பிறந்தோமாம்!
அத்தகைய வலுவான பின்னணி
கொண்டது எங்கள் பால்ய நட்பு!

பள்ளிப் பருவத்தில்
படிப்புடன் சேர்த்துப்
பல மணி நேரம் அவளுடனும்
முதலீடு செய்திருக்கிறேன்.

அந்த நாட்களில்
அவளைப் பார்த்துப் பழகாத
நாளென்று ஒன்றேனும் இருந்ததாய்
நினைவே யில்லை!

எனைத் தேடி அவளோ
அவளைத் தேடி நானோ
கட்டாயமாய்ச் சென்று
சந்தித்துவிடுவோம் தினசரியாய்...

என் வகுப்புகள் ஏற ஏறக்
கூடவே பாடச்சுமையும் ஏறிப் போக
அவள் வருகையும்
குறைந்துகொண்டே போனது...

எனைக் காண அவளோ
அவளைக் காண நானோ
எப்போதாவது விழைந்த போதிலும்
என் அன்னை தடுத்து விடுவாள்.

ஏனோ எங்கள் சந்திப்பு
என் அன்னைக்கு
எரிச்சல் ஏற்படுத்தியது;
இருப்பினும் அவளை
மதியாமல் இருவரும்
திருட்டுத்தனமாய் சந்தித்துவந்தோம்!

தொடர்ந்து வந்த எதிர்ப்பால் ஏற்பட்ட
பிரிவை ஆற்ற இயலாமல் நாங்கள்
பரிதவித்திருந்த நாட்களில் தான்
எங்கள் நட்பே காதலாய் மருவக் கண்டோம்!

பொதுத் தேர்வுகள் முடியும் வரைப்
பிரிந்திருந்த நாட்கள்
பரந்தோடிப் போயின...

எங்கள் பழம் நட்பைப் புதுப்பித்து
காதலாய்ப் பதவியுயர்த்திய தினத்தில்
புதிதாய்ப் பிறந்ததுபோலுணர்ந்தோம்!

பள்ளிக் காலங்களில்
சந்திக்க இயலாமல் தொலைத்த நேரங்களை
கல்லூரிக் காலங்களில் சந்தித்துத் தீர்த்து
சமன் செய்தோம்.

உடற்களைப்பால் நான்
உழல்கின்ற போழ்தெல்லாம் எனை
உணர்ச்சிமிக்குத் தழுவி
உன்னதமாய் கவனித்துக் கொள்வாள்!

என் கண்ணிரண்டையும்
தன் கண்ணிரண்டாய்ப்
பேணிப் பாதுகாப்பாள்!

என்னிரு கண்களும்
அவள்பால் பார்வைகள் வீசுகையில்
தன் கவனம் சிதறுகிறதெனக் கூறி
என் கண்கள் மறைப்பாள்!

புணரவைக்கும் உணர்ச்சிக்கு
புதுக் காதல் ஜோடிகளை
உட்படுத்தும் கார்காலம், எங்களையும்
விட்டு வைக்கவில்லை!

தெவிட்டத் தெவிட்டக் காதலித்தோம்
என்றபோதும் நான்கு வருடமாய்ப் பெற்றக்
கல்லூரிக் காலச் சுதந்திரம்
நான்கு விநாடியில் முடிந்ததுபோலிருந்தது!

உடலுழைப்பே இல்லாமல்
ஒரே இடத்திலமர்ந்து செய்யும்
உத்தியோகம் எதிலும் நான்
சேர்வதில் அவளுக்கு விருப்பமில்லை.
ஆனால், விதியெனக்கு செய்வித்ததோ
மென்பொருள் பொறியாளனாய் ஓர் பணி.

குன்றத் துவங்கியது அவளுடன் செலவிடும் நேரம்,
கூடத் துவங்கியது எங்களிடையே ஓர் தூரம்!
என்னவள் என்னை விட்டுச்
சற்றே விலகத் தொடங்கினாள்...

எனக்கவள் மீது இருந்த
அன்பும் காதலும் பாசமும்
குன்றாதிருந்த போதும்
பயனேதுமின்றிப் போனது!

"சொன்னால் தானே காதலும், கவிதையும்?"
எனும் கொள்கை கொண்டவள் அவள்!

பணியில் எனது வேலைப் பளுவும்
அவளுக்காய் நான் செலவிடும் நேரமும்
தலைகீழ் விகிதங்கள் கொள்ள,
ஊடலுக்காய் போட்ட சண்டைகள் போய்,
மோதலுக்காய் போடும் சண்டைகள் ஆயின!

நிரந்தரமாய் அவள் என்னைப்
பிரிந்து இன்றுடன் பல மாதங்களாகின்றன!

அவளின்றி நான் வாழ்வது
எள்ளளவும் சாத்தியமில்லை
என்பதை எவ்வாறு அவளுக்கு
உணர்த்தப் போகிறேன்?

அவள் பிரிவால் வாடும்
அவள் விரும்பிய என் கண்களைக்
கண்ணாடியில் காண்கையிலெல்லாம்
நோகிறேன்!

ஒருநாளல்லது ஒருநாள் அவள்
வருவாள் என்னிடம் என
விழி மீது விழி வைத்துக்
காத்திருக்கிறேன்; விழி மூடிப்
பார்த்திருக்கிறேன்!

இன்ன பல தோல்வியுற்ற
காதல் கதைகளைப் போல்
எனதும் மிகச் சாதாரணமானதென
எண்ண வேண்டாம்...

எம் காதல் கதையைக்
கூறும் உற்சாகத்தில் அவள்
பெயரைக் கூற நான் மறந்துவிட்டேன்
என தற்போதுதான் உணர்கிறேன்!

அவள் பெயரைத் தெரிந்து கொண்டதும்
இக்கதையை மறுபடி படித்தால்
நீங்களும் என் வலியை உணரலாம்!

மயில் போல் உருவம் உரித்தானவளல்ல..
குயில் போல் குரள்வளம் கொண்டவளல்ல...
வெயில் போல் வெக்கை வாய்த்தவளுமல்ல...
சாந்தம் சுமப்பவள்...
நிம்மதி நிறைப்பவள்....
அமைதி அளிப்பவள்...
அவள் பெயர்... 'துயில்'!!

Translation:


Most of the men
would not be having
a childhood female friend;
but, I'm an exception!

Our friendhip blossomed
as soon as I started having
consciousness over my life.
May be not so late too...
It might have sprouted
even earlier!

Seems I've fondly played
with her right since my birth -
Mom used to tell this often!

Above all, seems both of us
were born on a same day!
Our childhood friendship has got
such a strong background!!

During school days,
along with studies,
I've invested so many hours
with her too!

I do not remember even
a single day when we did not
meet or mingle!

Either I would search her or
She would search me to meet,
daily...

As my grades increased,
and as my study load increased,
her presence started decreasing...

Even when I craved to meet her and
when She craved to meet me,
my Mom used to restrict us!

Don't know why,
but our meetings
used to annoy her!
However, we cheated her
and met stealthily!

Due to the intermittent restrictions to meet,
as we terribly missed each other,
we saw our friendship tranforming into love!

The days when we were apart
during Public Exams,
flew away so soon...

The day we renewed our old friendship
and promoted it to love,
we felt like a new born!

We compensated the days
when we missed to meet during school days
with frequent meetings during college days!

She used to embrace and take care of me
whenever I suffered severe body pain!

She used to preserve and protect
my pair of eyes
just like her pair of eyes...

She used to hide my eyes
whenever I gazed at her,
telling my looks distract her.

Monsoons that force the
budding pairs to make love,
did not spare us too!

Though we did love to the core,
the four years of freedom in college
flew away like four seconds.
She did not like me taking up
a job that does not demand
physical work!
But, I was destined
to be a Software Engineer..

The time I spend for her descended and
the distance between us ascended...
She started going away from me!

Though the care, love and affection
I had for her was steady enough,
things were out of control!

"Shouldn't be left unsaid -
let it be love or poem",
is her motto!

The pressure at my workplace and
the time I spend for her became
inversely proportional;
We stopped pretending to fight and
started to fight!

It has been so many months till date
since she left me forever!

How am I going to prove her
that it is extremely impossible
for me to live without her?

I'm getting distressed whenever
I happen to see my eyes that she loved,
in the mirror!

I'm looking at my eyes and hoping
she'll come back to me one day or
the other; I'm closing my eyes and
visualizing that day!

Do not think
that my story is just like
the other broke up love stories
in the market!

I just realize I have forgotten to
tell you her name, in the excitement
I had while narrating my love story.

If you read this story once again
after knowing her name,
I'm sure you'll better understand my pain!

She doesn't have looks as good as a peacock...
She doesn't have voice as good as a cuckoo...
She doesn't scorch people like the Sun...
She carries peace...
She abundances relief...
She gifts silence...
Her name is 'Sleep'!

4 comments: